Skip to main content

முல்லை பெரியாறு அணை விவகாரம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
Mullai Periyar Dam Issue The Supreme Court is a barrage of questions for the central govt

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூவ் நெடும்பரா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைச் சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாகக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று (08.01.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது?. அணை பலமாக உள்ளதாக என்பது தொடர்பாக மத்திய அரசு, நிபுணர்கள் குழுவிடம் கருத்துக் கேட்டு அணையின் கட்டமைப்பு ரீதியாக ஆய்வு செய்து உரிய முடிவு  எடுக்க அறிவுறுத்தியிருக்கலாம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என அறிய விரும்புகிறோம். மேலும் இதற்கு முன்னர் இந்த அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவிடம் பெற்ற அணையின் தரம் குறித்த தன்மையும் அறிய விரும்புகிறோம்” எனத் தெரிவித்தனர். அப்போது கேரள அரசு தரப்பில் வாதிடுகையில், “கேரள வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புகளை உச்சநீதிமன்ற கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதன் பின்பு இந்த விவகாரத்தில் அணை பாதுகாப்பு ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். அதேபோல் மத்திய மத்திய அரசு ஆணை பாதுகாப்பு சட்டத்தின் படி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி அணை பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்டு தேசிய குழு அமைக்க அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய அளவிலான நிபுணர்கள் ஏன் அமைக்கப்படவில்லை?. முல்லை பெரியார் அணையின் உரிமையாளர் என்ற முறையில் தமிழக அரசும் நிபுணர்கள் குழுவை அமைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கையில், “ஏற்கனவே நிபுணர்கள் குழு தொடர்பாகப் பரிந்துரையைத் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கினை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்