Skip to main content

கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு; அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
Devotees  incident Tirupati; Chief Minister Chandrababu Naidu's action order for officials

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் (10.01.2024) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில் 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் கணவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது மனைவி மற்றும் பலர் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகளை பெற முயன்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதனையடுத்து நான் எனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தேன், அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் அலுவலகம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் தொலைப்பேசியில் பேசினார். சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பதி கூட்ட நெரிசல் நிலவரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, போலீஸ் டிஜிபி, திருப்பதி தேவஸ்தானம் போர்டு செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக முதல்வர்  சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிந்ததும், அதற்கான ஏற்பாடுகளை ஏன் செய்ய முடியவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை (09.01.2024) காலை திருப்பதி சென்று இந்த சம்பவத்தில்  காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரிக்க உள்ளார்.

Devotees  incident Tirupati; Chief Minister Chandrababu Naidu's action order for officials

மேலும் இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், “இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  40 பக்கர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்