‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம், நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளிநடப்பு செய்தது குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
2023ஆம் ஆண்டு இதே போல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் ஒரு அறிக்கை உரை கொடுத்தார். இந்த உரை நிகழ்வானது அரசியல் அமைப்பு சட்டம் 176ஆவது விதியின் கீழ் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் இருந்தது. ஆளுநர் உரையாற்றும்போது பெரியார், கலைஞர் போன்ற தலைவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. சித்தாந்த ரீதியாக அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று வைத்துக்கொண்டாலும் பெண்கள் முன்னேற்றம் குறித்த திட்டத்தில் அவருக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லை என வெளிப்படுத்தியதுபோல் அதை நினைத்துக்கொள்ளலாமா?.
அதே போல் 2024ல் சட்டப்பேரவையில் நேரடியாக தேசீய கீதம் பாடவில்லை என உரையை வாசிக்காமல் அமர்ந்துவிட்டார். அதை அப்படியே இந்தாண்டும் செய்திருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை அதிகாரத்தைத் தொடர்ந்து ஆளுநர் விதிமீறல் செய்து வருகிறார் இதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. இதைத் தாண்டி அவரின் செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிடல்தான். சரியாக 9.25 மணிக்கு ஆளுநர் தலைமைச் செயலகத்திற்குள் வருகிறார். 9.30 மணிக்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்பு 9.35 மணிக்கு ஆளுநர் தலைமைச் செயலகத்தினுள் அமர்ந்து வெறும் மூன்று நிமிடத்தில்(9.40) வெளிநடப்பு செய்தார். அதன் பின்பு 9.43 மணிக்கு வெளிநடப்பு செய்ததற்கு ராஜ்பவவ் எக்ஸ் பக்கத்தில் இருந்து விளக்கம் வருகிறது. அதெப்படி மூன்று நிமிடத்தில் இவர் தொடர்புகொண்டு விளக்கம் கொடுக்க முடியும்? வந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்ற திட்டத்தோடுதான் அவர் அவைக்கு வந்திருக்கிறார்.
ஆளுநரின் இந்த திட்டமிட்ட செயலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு முதலாவது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போகக்கூடாது இரண்டாவது அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் சம்பவம் விவகாரத்தில் பல்கலைக்கழக வளாக பாதுகாப்புக்குச் செயல்பாடுகளுக்கு டெண்டர் எடுத்திருப்பது பதிவாளர்தான். அந்த பதிவாளர் ஆளுநர் கட்டுப்பாட்டில் இருக்கிறார். துணை வேந்தரை நியமித்திருந்தால் அரசுடைய கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் நடந்த சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்றிருக்கும். துணை வேந்தர் நியமிக்காததால்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்ற நிலைப்பாட்டைத் தெரிவிக்க சட்டமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பியது. ஆனால் துணை வேந்தர் இல்லாதது குறித்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளுநர் இருக்கிறார். இந்த கேள்வி வந்துவிடுமோ என திசை திருப்பி ஆளுநர் தலைமைச் செயலகத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் இதுபோல நடந்துகொள்வதற்கு காரணம். அது சட்டமன்ற குறிப்பாக ஆகும்போது, தன்னுடைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் திராவிட மாடல் அரசு இருக்கும்போது பேசியிருக்கிறேன் என்று மற்ற மாநில ஆளுநர்களுக்கு காட்ட விரும்புகிறார். துணை வேந்தரை நியமிக்காத காரணத்தினால்தான் அண்ணா பல்கழைகலகத்தில் அப்படிப்பட்ட கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட கருத்து பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அரபு நாடுகளைப்போல் தண்டனை கொடுக்க வேண்டும். சிறுமி ஆசிபா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. அமைச்சர்கள் கொடி ஏந்தி வலம் வந்தார்கள். அதற்கு பா.ஜ.க. தலைவர் தன்னை எத்தனை முறை சாட்டையால் அடித்துக்கொண்டார்? பாதிக்கப்பட்ட பெண்ணின் எஃப்.ஐ.ஆர் லீக் ஆனபோது காவல்துறையை பா.ஜ.க. மாநில தலைவர் குறை சொன்னார். ஆனால் அதை தேசிய தகவல் மையம் தொழில்நுட்ப கோளாரால் ஏற்பட்ட பிரச்சனை என மத்திய அரசு தவறை ஒப்புக்கொண்டது. ஆனால், அதற்கு முன்பே இந்த விஷயத்தை பா.ஜ.க. மாநில தலைவர் ஏன் அரசியல்படுத்துகிறார்? லைம் லைட் அரசியல் செய்ய பெண்களுடைய விஷயத்தை கையில் எடுக்கிறார்கள் என்றார்.