தமிழ்நாட்டில் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் தற்போது அதிகமாகப் பரவி வரும் நிலையில், இந்த நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நக்கீரன் வாயிலாக டாக்டர் ராஜேந்திரனை சந்தித்தோம். அப்போது அவர் இந்த நோயிடமிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் புதிதானது இல்லை. இந்த நோய்க்கு பெரிய வரலாறு இருக்கிறது. ஸ்க்ரப் டைஃபஸ் பற்றி 1416ஆம் ஆண்டியிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வந்துள்ளனர். ஸ்க்ரப் டைஃபஸ் வைரஸ் மூலம் பரவாது. இந்நோய் பாக்டீரியாவில் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களிடையே வேகமாகப் பரவும். ஆனால் பெரும்பாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகிவிடுவார்கள். ஒரு சில காரணங்களால் இந்நோயால் பாதிக்கப்பட்ட சிலரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது. ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலை ஒரு காலத்தில் ஜெயில் காய்ச்சல் என்று சொன்னார்கள். முன்பு சிறையின் சுத்தமின்மையால் அங்கு ஒட்டுண்ணிகள் உருவாகி கைதிகளிடையே இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது.
சரிவரப் பயன்பாட்டில் இடங்களில் இருக்கும் உண்ணிகள் தகுந்த சூழ்நிலை வரும்போது மனிதர்களைக் கடிக்கும். பின்பு அந்த உண்ணியில் உள்ள ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலுக்கான பாக்டீரியா மனிதர்களின் உடலில் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலுக்கான பாக்டீரியா சுகாதாரமற்ற பகுதிகளில் இனப்பெருக்கம் அடைந்து மனிதர்களிடையே பரவும். அப்படிப் பரவி பாதிக்கப்பட்ட மனிதர்கள் இந்த காய்ச்சலுக்கான ஹோஸ்ட்டாக(Host) இருப்பார்கள். அந்த ஹோஸ்ட்டாக மாறினவர்கள் சுகாதாரமில்லாமல் இருந்தால் இந்த காய்ச்சல் வேகமாகப் பரவும்.
இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியா ஒரு மனிதரிடையே பரவினால் முதலில் அந்த உடல் தனக்குத் தகுதியானதா? என்பதைப் பார்த்து, அதன் பிறகு இனப்பெருக்கத்தை தொடங்கும். பின்பு அந்த பாக்டீரியா மூன்று அல்லது 7 நாட்களில் உடலில் வந்ததை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த பாக்டீரியா காய்ச்சல் பரவ ஹோஸ்ட், ஏஜண்ட், சுற்றுச்சூழல் என மூன்று நிலைகள் தேவைப்படுகிறது. ஹோஸ்ட் என்பவர் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர். ஹோஸ்ட்க்கு நோய்த் தொற்று பரவ காரணமானவர். சுகாதாரமற்ற சுற்றுச்சூழல். இம்முன்று நிலைகளில் இந்த பாக்டீரியா பரவும். இந்த காய்ச்சல் பரவிய நோயாளிகளிடம் பெரும்பாலும் வெளியில் எங்கேயாவது சுகாதாரமற்ற பகுதிகளில் சென்று வந்தீர்களா? என்று கேட்போம். ஏனென்றால் இந்த நோய் காரணியான ஒட்டுண்ணி அதுபோன்ற சூழலில்தான் இருக்கும். ஏற்கனவே எதாவது நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குறுகிய கால தீவிர காய்ச்சல் ஏற்படும். அதோடு தலைவலி, உடல் வலி இருக்கும். இந்த மூன்றும் இந்நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இதுபோன்ற உண்ணியால் பரவும் காய்ச்சலுக்கு மட்டுமில்லாது டெங்கு போன்ற காய்ச்சலுக்கு அறிகுறியாக இருக்கும். ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலுக்கான பாக்டீரியா கிருமியின் தனித்தன்மைக்கு ஏற்ப அடுத்தகட்ட அறிகுறிகள் உடலில் வெளிப்படும். முதலில் இந்த நோய்க்கான காய்ச்சல் வரும்போது, சாதாரணமான காய்ச்சல் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இதயம், கிட்னி, நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளைத் தாக்கும் அளவிற்கு ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலுக்கு வலிமை இருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் அருகில் இருக்கும் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் பலர் இதுபோன்ற நோய்களால் மோசமான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த நோய் வராமலிருக்க மண்டி கிடக்கும் புதருகள். சுகாதாரமற்ற பிராணிகளிடம் உறவாடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சில வேலையின் நிமித்தம் அப்படிப்பட்ட சூழலில் இருக்கும் பகுதிக்குள் சென்றால், பின்பு உடலையும் உடைமைகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளாடைகளைச் சுத்தமாக துவைத்து உளர வைத்து அணிய வேண்டும். உடலில் அதிக முடி இருக்கும் இடங்கள், மறைவான இடங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எஸ்கார் என்ற சின்ன காயம் இருக்கும். இது உண்ணி கடித்ததற்கான அறிகுறி.
நான் பார்த்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உண்ணி தாக்கிய கருப்பான காயம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவர்களிடம் சரியாகச் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். இந்த நோயை சுலபமாகக் கட்டுப்படுத்த அசித்ரோமைசின், குளோரோமைசிட்டின் போன்ற மலிவான மாத்திரைகள் இருக்கிறது. எனவே முதலில் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி என்ன வகையான நோய்த் தொற்று என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.