சென்னையில் பல இடங்களில் கடைகளுக்கு சென்று ஜிஎஸ்டி ஆபீஸர் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற நபர் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் வெள்ளை வேட்டி சட்டையுடன் டிப் டாப்பாக உள்ளே நுழைந்த ஒருவர் ஜிஎஸ்டி ஆபீஸில் இருந்து வருவதாகவும், பொங்கல் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நடத்திவரும் கடைகளுக்கு சென்று ஆய்வுசெய்து தனக்கு பணம் வேண்டும் என வெளிப்படையாகக் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பணம் வசூலித்து வந்த அந்த நபர் போலியானவர் என்பதை தெரிந்துகொண்ட கடை உரிமையாளர்கள் அவருடைய போட்டோவுடன் கூடிய தகவலை வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். இந்நிலையில் திருநின்றவூர் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடைக்கு அதே நபர் வெள்ளை உடையுடன் பாலிசாக சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு ஜிஎஸ்டி ஆபீஸர் என்பதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்டுள்ளனர்.
மேலும் கடையில் சிசிடிவி இருக்கிறது என்பதை அவருக்கு காட்டியதோடு வாட்ஸ்அப் குழுக்களில் வெளியான தகவலை காட்டினர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது 'அவர் பக்கத்துக் கடையில் வாங்கிய 2000 ரூபாயை கொடுத்துவிட்டேன். பணம் வாங்கியது தப்பு தான்' என ஒப்புக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.