கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே ‘என்னை இழுக்குதடி...’, ‘லாவெண்டர் நேரமே...’, ‘இட்ஸ் பிரேக் அப் டா...’(IT'S A BREAK-UP DA) ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘என்னை இழுக்குதடி...’ பாடல் நல்ல வரவேற்பபை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் பாடல்களை மேடையில் பாடினார். அப்போது படக்குழுவினரை வாழ்த்தி பேசிய அவர், விழாவில் கலந்து கொண்ட அனிருத் குறித்தும் பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, “அனிருத் நன்றாக இசையமைக்கிறார். பெரிய பெரிய படங்களுக்கு ஹிட் கொடுக்கிறார். அப்போதெல்லாம் பத்து இசையமைப்பாளர்கள் தான் இருப்பார்கள். இப்போது பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் அவர் நிலைத்து நிற்கிறார் என்றால் திறமை இல்லாமல் முடியாது. இதையெல்லாம் முடித்துவிட்டு ‘தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான்’ எனச் சொல்கிறார். அதுக்கு ஒரு மனம் வேண்டும். அவருக்கு ஒரு வேண்டுகோள். கிளாசிக்கல் இசை கற்றுக்கொண்டு அந்த இசையில் அவர் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அப்படி பண்ணால் அவர் இன்னும் பெரிய அளவில் வருவார். அதோடு அந்த இசை இளம் தலைமுறையினரிடம் போய் சேரும்” என்றார்.