விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் வந்த நிகழ்வு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கட சிவா. இவர் தன்னுடைய நிலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் நெல், வாழை முதலிய பயிர்களை அதிகம் பயிரிட்டு வந்துள்ளார். தற்போது மக்காசோளம் பயிரிட்டுள்ள நிலையில் இன்று காலை ஆழ்துளைக் கிணற்றை ஆன் செய்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எப்போதும் போல் அதில் தண்ணீர் வராமல் பால் போன்ற நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், செய்வதறியாது திகைத்துள்ளார். பிறகு அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து வர வைத்துள்ளார். அவர்களும் இந்த நிகழ்வை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனை செய்வதற்காக அதனை ஆய்வகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அங்குள்ள மக்களை அதிர்ச்சியும் ஆச்சரியமும் படவைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.