
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அவரவர் மொழி அவரருக்கே. கெடுவாய்ப்பாக வெள்ளைக்காரன் நம்மை ஆண்டுவிட்டான். அதனால் பொதுமொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நமக்கு ஆங்கிலம் இருக்கிறது. விரும்பினால், இந்தி மொழி உள்பட உலக மொழி எல்லாவற்றையும் நாங்கள் கற்கிறோம். இல்லையென்றால், இந்தி தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் எங்களுடைய மொழியை கற்க சொல்லுங்கள். இந்தியை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஏன் நாங்கள் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடாதா?. இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களில் தமிழையும் சேர்த்து கொள்வார்களா?. விரும்பினால் இந்தியை கற்றுக் கொள்வோம். மொழி என்பது குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும்.
எந்தவொரு தேசிய இனத்திற்கும் கொள்கை மொழியாக ஒரு மொழிதான் இருக்கும். கட்டாயமாக இந்தி படி என்றால், வேறு மாதிரி நடக்கும். பல மொழிகள் இருப்பதால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கிறது. ஒரே மொழி இருந்தால், புதிதாக பல நாடுகள் பிறக்கும். அதனை எந்த கொம்பன் ஆனாலும் தடுக்க முடியாது. இந்தியை கட்டாயம் கற்க வேண்டுமென்றால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன?. வரி மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், கடிதம் அனுப்பும் போது மட்டும் இந்தியில் அனுப்புகிறார்கள். அவ்வளவு ரோஷம் இருந்தால், தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? அதனால், கட்டாயம் இந்தியை படிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கூட சரியான விஷயமல்ல” என்று தெரிவித்துள்ளார்.