Skip to main content

விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத தங்கை... போலீஸில் புகாரளித்த சிறுவன்... ஒரு சுவாரசிய சம்பவம்...

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

kerala boy complained police after his sister refused to play with him

 

தனது தங்கை உட்பட நான்கு சிறுமிகள் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை எனச் சிறுவன் ஒருவன் காவல்துறையிடம் புகாரளித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 


கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் உமர். ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுவன், தனது நண்பர்கள் வீட்டிற்கும் விளையாடச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது தங்கை மற்றும் அவரது நான்கு தோழிகளிடம், தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளான் சிறுவன் உமர். ஆனால் அவர்கள் உமரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்துள்ளனர். இதனையடுத்து நேராக வீட்டிற்குச் சென்ற சிறுவன், தங்கை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாததால், போலீஸில் புகாரளிக்கப் போகிறேன் எனக் கோபத்துடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்ட பெற்றோர், தங்களது அன்றாட வேலைகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுவன் உமர், நான்கு சிறுமிகள் தன்னை விளையாடச் சேர்த்துக் கொள்ளவில்லை என, தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளித்துள்ளான். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனைப் படித்த காவலர்கள், அந்தச் சிறுவனுக்கு உதவ எண்ணி, அச்சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று, தங்கையிடம் உமரை விளையாடச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி சென்றுள்ளனர். விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாதத் தங்கை மீது எட்டு வயது சிறுவன் காவல்துறையில் புகாரளித்த சம்பவம் அப்பகுதியில் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்