வீட்டில் புகுந்த குரங்கு கூட்டம் மூதாட்டி ஒருவரை தாக்கி காயப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பெத்த பள்ளி பகுதியை ஒட்டியுள்ளது சுல்தானா பாத் என்ற பகுதி. இந்த பகுதியில் அடிக்கடி குரங்குகள் கூட்டம் கூட்டமாக வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்வது, மனிதர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூட்டமாக புகுந்த குரங்குகள் விரட்ட முற்பட்ட மூதாட்டியை தாக்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை குரங்குகள் கடித்து குதறும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு சுல்தான்பாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர். அதேபோல் குரங்கு கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு புகுந்து மூதாட்டியை குரங்கு கூட்டம் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.