
63 வயதான மனோகர் பாரிக்கர் கடந்த அக்டோபர் 14-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வந்த அவர், நீண்ட நாட்களுக்கு பின் அலுவல் நிமித்தமாக இன்று வெளியே வந்துள்ளார். கோவா கட்டுமானக் கழகமும் லார்சன் அண்ட் டூர்போ நிறுவனமும் இணைந்து மேம்பாலம் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றது. இதனை மேற்பார்வை செய்ய இன்று மனோகர் பாரிக்கர் வந்தார். அவருடன் இரண்டு மருத்துவர்களும் வந்திருந்தனர். மூக்கிலிருந்து டியூப் சொருகப்பட்டு, மெலிந்த உடலுடன் வந்திருந்த அவரை கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உதவியாளர்கள் கைத்தாங்கலாக அவரை பிடித்துக்கொண்டனர்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து இது குறித்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி பதிவு செய்த ட்வீட்டில், "அவரது மூக்கில் ட்யூப் செலுத்தப்பட்டுள்ளதா? ஒரு மனிதர் நோய் வாய்ப்பட்டிருக்கும்போது பணி செய்ய சொல்லும் அளவுக்கு ஒரு கட்சிக்கு அதிகாரப் பசி இருக்குமா? பாஜக, பதவி அதிகாரத்துக்காக எதையும் விட்டுவைக்காது. முதல்வர் அவர்களே உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கட்சி உங்களை கவனிக்காது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த புகைப்படத்தை பார்த்து பாரிக்கரின் உடல் நிலை குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக மனோகர் பாரிக்கர் கோவா, மும்பை, டெல்லி, நியூயார்க் என பல்வேறு நகரங்களில் மருத்துவ சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.