Skip to main content

"திட்டமிடப்பட்ட தாக்குதல்" - அமைச்சர் மீது குண்டு வீசப்பட்டது குறித்து மம்தா குற்றச்சாட்டு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் உசேன். முர்ஷிதாபாத் அருகே நிமிதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகிர் உசேன் மீது குண்டு வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சர் மீது இரயில் நிலையத்தில் குண்டு வீசப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

இந்தச் சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் உசேன் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 14 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் ஜாகிர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட சதி எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், “இது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல். இது ஒரு சதிச்செயல். ஜாகிர் உசேனை தங்ளோடு இணையும்படி சிலர், கடந்த சில மாதங்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இதற்குமேல் எதையும் வெளியிட விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்திருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த தங்கள் பொறுப்பை ரயில்வே எவ்வாறு மறுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட வழக்கை, மேற்கு வங்க அரசு சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளது. மேலும் இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை!” - உறவை துண்டித்த மம்தா பானர்ஜி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Mamata Banerjee broke off the her brother relationship

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால், மேற்கு வங்கத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். 

அதன்படி, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும், அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கட்சி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்திரி ஆகியோர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹவுரா தொகுதியின் வேட்பாளராக சிட்டிங் எம்.பியான பிரசுன் பானர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஹவுரா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற பிரசுன் பானர்ஜிக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கியதற்கு மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து பாபுன் பானர்ஜி கூறுகையில், “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும், பிரசுன் பானர்ஜியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், ஹவுரா தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

பாபுன் பானர்ஜி பேட்டியளித்த, அடுத்த சில மணி நேரத்திலேயே மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாபுன் பானர்ஜி ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களையும் பிடிக்காது. வாரிசு அரசியலிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. எனவே, பாபுன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொள்கிறேன். எனது குடும்பமும் நானும், பாபுன் பானர்ஜி உடனான உறவை துண்டித்துக் கொள்கிறோம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் அதிருப்தியடைவாரோ என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார்” - காங்கிரஸ் விமர்சனம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Congress says Mamata Banerjee fears PM's regret

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அதே வேளையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முடிவு செய்திருந்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (10.03.2024) வெளியிட்டார். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய சீட்-பகிர்வு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக பலமுறை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும் முறையை காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணி இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்தரி கூறுகையில், “இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். இந்தியா கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால், பிரதமர் மோடிக்கு அதிருப்தி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி உள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதன் மூலம், ‘என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். பா.ஜ.க.வுக்கு எதிராக நான் போராட நிற்கவில்லை’ என்று பிரதமர் அலுவலகத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.