மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை அடுத்த நேப்பேன்சீயில் வசித்து வருபவர் தொழிலதிபரான அமர் மனிஷ் ஜாரிவாலா (வயது 43). இவர் கடந்த மே மாதம் 30- ஆம் தேதி அன்று மலாட் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பந்த்ரா வோர்லி கடல் பாலம் வழியாக செல்லும் போது அவரது கார் மீது ஒரு பறவை மோதியது. அதைத் தொடர்ந்து, காயமடைந்த பறவையைக் காப்பாற்ற அமர் மனிஷ் ஜாரிவாலா காரில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது, வேகமாக வந்த டாக்ஸி ஜாரிவாலா மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஷியாம் சுந்தர் காமத் மீது மோதியது. இதையடுத்து, இருவரையும் சாலையில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொழிலதிபர் அமர் மனிஷ் ஜாரிவாலாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கார் ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இக்காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக உள்ளது.