நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால் இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், நேற்று (18-12-23) காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே கூடியது. அப்போது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் செய்ய வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளுமே மாலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாலை 3 மணிக்கு பின், மக்களவை கூடியதும் அவை நடத்தை விதிமுறை மீறி அமளியில் ஈடுபட்டதாக மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று (18-12-23) மாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட 47 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெயரை வாசித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குரல் வாக்கெடுப்பு மூலம் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “முதலில், ஊடுருவல்காரர்கள் நாடாளுமன்றத்தை தாக்கினர். அதன் பின்னர், மோடி அரசு நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் தாக்குகிறது. மாநிலங்களவையில் 47 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் மூலம் அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் எதேச்சதிகார மோடி அரசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. எங்களின் 2 கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை. அவை, நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு அவைகளிலுமே கண்டிப்பாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இரண்டாவது, இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது தான்.
மோடி பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கலாம். மத்திய உள்துறை அமைச்சர் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால், மக்களை பிரதிநிதிப்படுத்தும் நாடாளுமன்றத்திற்குள் அவர்கள் வந்து பதில் அளிக்க வேண்டாமா?. இனி எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தில், எந்தவித விவாதமும், கருத்து வேறுபாடும் இல்லாமல் நிலுவையில் உள்ள அனைத்து சட்டங்களையும் பா.ஜ.க அரசு புல்டோசரில் ஏற்றி நசுக்கி அதை நிறைவேற்ற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.