சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் எல்லைப்பகுதியைப் பகிர்ந்துகொள்கின்றன. இதில் டோக்லாம் மற்றும் பூடான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா 2 கி.மீ தூரமளவிற்கு ஒரு சிறிய கிராமத்தையே அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவால் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகள், ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்குப் போடப்பட்ட சாலைகள் ஆகியவை புதிதாக வெளியான செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகக் காணும்படி அமைந்துள்ளன. கடந்த மே மாதம் முதல் இந்தியா உடன் எல்லைப்பிரச்சனையில் ஈடுபட்டுவரும் சீனா, தற்போது ஜம்மு காஷ்மீரைக் கடந்து பூடான், சிக்கிம் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுவது இந்தியாவுடனான அந்நாட்டு உறவை மேலும் சிக்கலாக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, "சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது. இந்த சாதாரண உண்மையை உணர மத்திய அரசு மறுக்கின்றது" என விமர்சித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, "ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் இந்த பிரச்சனையை எழுப்பக்கூடாது. கடந்த 1962 முதல் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் அரசு ஆகிவற்றின் தவறான கொள்கைகளே நாம் இதற்கு முன்னர் சீனாவிடம் நமது நிலங்களை இழக்க காரணம். அவர்கள் முதலில் தங்கள் கட்சி விஷயங்களை சரிசெய்துவிட்டு அதன்பின்னர் பேசட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.