
தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.
பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது.
இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.