Skip to main content

ம.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு; அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
madhya pradesh cm order ban meet open sales in public

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டது. போபாலில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் மத்தியப் பிரதேச முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று (13-12-23) போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். 

மத்தியப் பிரதேச முதல்வர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவதா மற்றும் ராஜேந்திரா சுக்லா ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில், திறந்தவெளியில் இறைச்சிக் கடைகளை நடத்துவதற்கும், வழிப்பாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிப்பதாக முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

போபாலில் இன்று (14-12-23) மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இறைச்சிக் கடைகளை நடத்துவதற்கு முதல்வர் மோகன் யாதவ் தடை விதித்துள்ளார். இது குறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “உணவு பாதுகாப்பு விதிகளுடன் இணைந்த வழிகாட்டுதல்களின்படி திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயங்கள் அளித்திருக்கும் உத்தரவுகளைப் பின்பற்றி, இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக உருவாக்கப்படும். மேலும், பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தவெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்குத் தடை விதிக்க உணவுத்துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகளால் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மத்தியிலும், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்