
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று (18-02-25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க சார்பில் அமைச்சர் துரை முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காதர் மொய்தீன், ஜாவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல் திருமாவளவன், “மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்தார். அதற்கான அறப்போராட்டம் தான் இது. பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்துக்கு வந்தால் மாணவர்கள் மூன்று மொழிகள் கற்கும் நிலை வரும். இந்த மும்மொழி திட்டத்தை அவர்கள் திணிப்பதற்கு என்ன காரணம் என்றால், இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான். நீ எந்த தாய்மொழியை பேசினாலும், இந்தி தான் இந்தியாவின் தாய் மொழி, அதை பேசி ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரே தேசம் ஒரே மொழி, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் ஒரே மதம், ஒரே தேசம் ஒரே கட்சி என்பது தான் அவர்களுடைய இலக்கு. தமிழை அவர்கள் பிராந்திய மொழி என்கிறார்கள், இந்தியை இந்தியாவின் மொழி என்கிறார்கள். இது எவ்வளவு அபத்தம். தமிழ் பிராந்திய மொழி என்றால், இந்தியும் பிராந்திய மொழி தான்.
இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள், வடக்கில் ஒரு சில மாநிலங்களில் தான் இருக்கிறார்கள். ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள தாய் மொழியை அவர்கள் சிதைத்துவிட்டார்கள். அந்த மாநிலங்களில், தாய் மொழியை பேசுபவர்களை விட இந்தி மொழி பேசுபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். இந்தி என்பது அடிப்படையில் ஒரு மொழியே அல்ல. தமிழ் மொழி என்பது இந்தியாவின் ஒரே மொழியாக இருந்த காலம் உண்டு. இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்த மொழி தமிழ் மொழி. வட இந்தியாவிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். இனக்கலப்பு ஏற்பட்ட பிறகு, மொழிக் கலப்பு ஏற்பட்டு புதிய புதிய மொழிகள் உருவாகின. இந்தியையும் பிற்காலத்தில் அழித்துவிட்டு சமஸ்கிருதமே இந்தியாவின் தாய் மொழி ஆக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.
மோடியும், அமித்ஷாவும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்ட பாரப்பணர்களின் எடுபிடிகள், வேலையாட்கள். இதனால் தான் அவர்கள் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். அவர்களுக்காக தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ்காரர்கள். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் நாம் எல்லோரும் இந்தி பேசக்கூடியவர்களாக மாறி இருப்போம். நாம் எல்லோரும் இந்தி பேசக்கூடியவர்களாக ஆகியிருந்தால், மோடி வித்தை இங்கேயும் எடுபட்டிருக்கும். தமிழ்நாட்டிலும் அவர்கள் எளிதாக கால் ஊன்றி இருப்பார்கள். திராவிட இயக்கங்களும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் இருக்கும் வரைக்கும், அவர்களுடைய ஜம்பம் இங்கு பலிக்காது. அவர்களின் மாயமால வித்தைகள் எடுபடாது. நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது, வேரூன்ற முடியாது. உங்கள் வாலை ஒட்ட நறுக்குவோம் என்று சொல்வதை நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் எவ்வளவு பேரை ஏவி விட்டாலும், பெரியாருக்கு எதிரான அரசியலை பேசினாலும், இந்த மண்ணில் உங்கள் அரசியல் ஒருபோதும் எடுபடாது” என்று கூறினார்.