
வேலூர் கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் மண்டல மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் போது மேடைக்கு கீழே இருந்த தொண்டர் ஒருவர் திடீரென உயிருடன் உள்ள சேவல் ஒன்றை தூக்கிக் காட்டினார்.
எம்ஜிஆர் உயிரிழப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கும் போது சேவலை தூக்கி காண்பித்து இளைஞர்கள் கூச்சலிட்ட காட்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு விசாரிக்கப்படும் போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்கவேண்டும் என பாஜக அதிமுகவை அழைக்கிறது. அதிமுக முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் ஜெயலலிதா போல் சேவல் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை சிம்பாலிக்காக தொண்டர்கள் சொன்னார்கள் என கூறப்படுகிறது.