Skip to main content

“இன்னொரு மொழிப் போரையும் சந்திக்கவும் தமிழ்நாடு தயங்காது” - துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!

Published on 18/02/2025 | Edited on 18/02/2025

 

Tamilnadu deputy cm udhayanidhi stalin condemns new education policy

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (18-02-25) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க சார்பில் அமைச்சர் துரை முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காதர் மொய்தீன்,  ஜாவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tamilnadu deputy cm udhayanidhi stalin condemns new education policy

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “மத்திய அரசின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம். மிரட்டலுக்கு அடிபணிவோம் என்று கருதினால் கனவிலும் அது நடக்காது. அரசியல் எங்களுக்கு 2வது மொழி, இன உணர்வு தான் முதன்மையானது. இஸ்ரோ தலைவர்களால், விஞ்ஞானிகளாக தமிழ் வழியில் படித்தவர்களே உள்ளனர். இந்தியை ஏற்றுக்கொண்ட பல மாநிலங்கள் தங்களுடைய தாய்மொழியை இழந்து நிற்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராஜஸ்தானி, போஜ்பூரி போன்ற மொழிகள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இதற்கு காரணம், அங்கு இந்தி நுழைந்தது தான். அந்த மாநில மக்கள் இந்தியை படிக்கிறார்கள், ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய தாய்மொழியை மூன்றாவது மொழியாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்தி மொழியை ஏற்றுவிட்டால், நமது தாய்மொழியான தமிழ் மொழியை இழந்துவிடுவோம். இதைவிட, ஒரு துரோகத்தை யாராலும் செய்ய முடியாது. நம்முடைய தமிழ்நாடு அரசு, என்றைக்கும் மும்மொழி கொள்கையை ஏற்காது. ஆகவே, எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள். 

தமிழ்நாட்டுக்கு நியாயமாக கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.  நீங்கள் கொடுப்பதை விட்டுவிட்டு இப்படியே மிரட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால், தமிழர்கள் எங்களுக்கு எப்படி எடுக்க வேண்டும் என்பது தெரியும். அந்த நிலைமைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். இதை நான் எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன். நாங்கள், இந்திய சட்டத்தை மதிக்கிறோம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். அதனால் தான் நாங்கள் ஜனநாயக வழியில் குரல் கொடுக்கிறோம். நம்முடைய குரல், ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் காதுகளை நோக்கி விழ வேண்டும். நம்முடைய உரிமைகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு இன்னொரு மொழிப் போரையும் சந்திக்கவும் தயங்காது. நாம் எதிர்கொண்ட பிரச்சனை, திமுக அரசினுடைய பிரச்சனை கிடையாது. ஒவ்வொரு தமிழ்நாட்டு மாணவர்களுடைய பிரச்சனை இது. ஆகவே, இந்த ஆர்ப்பாட்டம் நம்முடைய பிள்ளைகளுக்கான ஆர்ப்பாட்டம். நம்முடைய உரிமைக்கான ஆர்ப்பாட்டம். இந்த விவகாரத்தை அரசியல் செய்வதையும் அவதூறு செய்வதையும் தயவுசெய்து விட்டுவிட்டு அ.தி.மு.கவும் எங்களோடு குரல் கொடுத்து வீதிக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கட்சி கொள்கையை அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் இணைந்து நாம் மும்மொழி கொள்கையை எதிர்க்க வேண்டும்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்