நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கடிதம் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அஸ்லம் ஷெர் கான், ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக தற்போது தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், "ராகுல் காந்தி ராஜினாமா செய்த பிறகு அந்த இடத்திற்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை நியமிக்க வேண்டும். ராகுல் காந்தி கட்சித் தலைவராக இருக்க விரும்பினால், அவரே இருக்கட்டும். ஆனால் வேறு யாரையாவது நியமிக்கலாம் என நினைத்தால், அந்த வாய்ப்பை நான் ஏற்கிறேன். நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாருக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுங்கள். மீண்டும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி காட்டுகிறேன்" என எழுதியதாக தெரிவித்தார்.
