Skip to main content

சுசில் குமார் மோடி மறைவு; பிரதமர் இரங்கல்!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Sushil kumar Modi passed away Condolences to the Prime Minister

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும், அம்மாநில முன்னாள் நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி (வயது 72) நேற்று (13.05.2024) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஷில் குமார் மோடியின் இறுதிச் சடங்கு பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த சுஷில் குமார் மோடி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரையிலும், அதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலும் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பணியாற்றி உள்ளார். மேலும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கட்சி பணிகளில் இருந்து விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார். அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபடாமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Sushil kumar Modi passed away Condolences to the Prime Minister
கோப்புப்படம்

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சுஷில் குமார் மோடியின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது எளிமையான இயல்பு, திறமையான நிர்வாகியாகத் தனது பங்களிப்பு, பொது வாழ்வில் தூய்மை மற்றும் அவரது ஆளுமை ஆகியவை அவரது பணியில் பிரதிபலித்தது. பீகார் மாநிலத்தின் துணை முதல்வராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவையின் இரு அவைகளின் உறுப்பினராகவும் சுஷில் குமார் மோடி உயர்ந்த லட்சியங்களைக் கடைப்பிடித்தார். இறைவனிடம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும், இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கட்சியில் எனது மதிப்புமிக்க சக ஊழியரும் பல தசாப்தங்களாக எனது நண்பருமான சுஷில் மோடியின் அகால மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் எழுச்சிக்கும், பீகாரில் அதன் வெற்றிகளுக்கும் அவர் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அனைவரிடமும் நட்பு பழகும் எம்.எல்.ஏ.வாக அறியப்பட்டார். அரசியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய அவரது புரிதல் மிகவும் ஆழமானது. ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜிஎஸ்டியை நிறைவேற்றியதில் அவரது பங்கு எப்போதும் நினைவில் இருக்கும். இந்த துக்க நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்