கண்ணுக்கு தெரியாத கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதாரத்தில் முன்னேறிய அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் அதையே வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.