கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களை தாக்கி விட்டு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அத்து மீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்தவர்களை தாக்கி மீன்களை கேட்டு மிரட்டியுள்ளனர். மீனவர்கள் மறுப்பு தெரிவித்தவுடன் படகில் இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொண்டு சென்றனர். மீனவர்களை தாக்கியதால் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீனவர்களின் நலன்களை விசாரித்தனர். காயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் "இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாகவும் இந்திய மீனவர்கள் அவ்வாறு மீன்பிடிப்பது சட்டவிரோத குற்றம் எனவும் அவ்வாறு மீன் பிடிப்பது தொடர்ந்தால் 2018ன் சட்டப்படி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.