இந்தியாவில் மனுஸ்மிருதியை அமல்படுத்த அரசியலமைப்பு சட்ட விரோத சக்திகள் சதி செய்து வருகிறது எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டமாக விமர்சித்துள்ளார்.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு கர்நாடக சட்டசபை இயங்கும் விதான சவுதாவில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு முகப்புரையை வாசித்தார். அவருடன், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சித்தராமையா, "உலகின் அனைத்து நாடுகளும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. ஏன், கௌதம புத்தர் காலத்திலும் ஜனநாயகம் இருந்துள்ளது. நமது அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தான் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும், நமது காங்கிரஸ் அரசு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வழியே செயல்படுகிறது. எனவே நாம் அரசியலமைப்பு சட்டத்தை அறிந்தால் தான் சமூகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அரசியல் அமைப்பும் திளைத்திருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் சித்தராமையா, "இந்தியாவில் மனுஸ்மிருதியை அமல்படுத்த அரசியலமைப்பு விரோத சக்திகள் திட்டமிட்டு வருகிறது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "ஒருவேளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து, மனுஸ்மிருதியை அமல்படுத்தினால், இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனை நிறைவேற்ற பலவித திட்டங்களை யோசித்து வருகிறார்கள். எனவே, இது பற்றி கவனமாக இருக்க வேண்டும். நமது அரசியலமைப்பு ‘இந்தியாவின் மக்களாகிய நாம்’ என்ற வாக்கியத்தில் இருந்து தான் தொடங்குகிறது. ஆனால், இதை எதிர்க்கும் சிலர், மனுஸ்மிருதியை அமல்படுத்தும் வேலைகளைச் செய்கின்றனர். மேலும், நாம் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு பின்பற்றாவிட்டால், சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கும்" எனப் பேசினார்.