இந்தி எதிர்ப்பு குறித்த கருத்துகள் தமிழகம் முழுவதும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது தென்னக ரயில்வே சத்தம் போடாமல் தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கட்டுப்பாட்டு அறையுடன் பேச இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழில் பேசும்போது பணியில் உள்ள ஒரு சில வெளிமாநில பணியாளர்களால் தமிழை புரிந்துகொள்ள முடியாததால் ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்கள் தட்டி செல்வதாக தமிழகம் முழுவதும் குரல் எழுந்துவரும் நிலையில், வெளிமாநிலத்தவர்கள் புரிந்துகொள்வதற்காக தென்னக ரயில்வேயில் இருந்து தமிழை நீக்கியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.