மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி குமார் வைஷ்ணவ் தனது, எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “வடகிழக்கு எல்லையோர ரயில்வே மண்டலத்தில் எதிர்பாராத ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் (SDRF) ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் விபத்து தொடர்பாக சீல்டா கிழக்கு ரயில்வே ரங்கபாணி நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து சம்பவம் குறித்து டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் போலீஸ் எஸ்.பி. அபிஷேக் ராய் கூறுகையில், “இந்த விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர். 20 முதல் 25 பேர் காயமடைந்துள்ளனர். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 லிருந்து 5 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், “ரயில் மோதியபோது நான் பி1 கோச்சில் பயணித்தேன். நான் விபத்தில் இருந்து மீட்கப்பட்டேன். என் தலையில் காயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.