இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயும் தாக்கிவருகிறது. பொதுவாக நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கும் இந்த நோய், கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சையில் இருப்பவர்களைக் கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது. மஹாராஷ்ட்ராவில் இதுவரை 90 பேர் கருப்பு பூஞ்சை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், கருப்பு பூஞ்சையை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன. அதாவது கருப்பு பூஞ்சை நோய் யாருக்கு ஏற்பட்டாலும் அதை உடனடியாக அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும், ராஜஸ்தான் மாநிலம் கருப்பு பூஞ்சையைத் தொற்றுநோயாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோய் சட்டம் 1897படி அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான சிகிச்சையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.