Skip to main content

“இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி... நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்” மத்திய இணை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

 "This is injustice for one crore youth..I expect a good response" S. Venkatesan MP's letter to Union Joint Minister

 

மத்திய அரசில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை அண்மையில் மத்திய அரசாங்கம் வெளியிட்டிருந்தது. அதில் பணியாளர் தேர்ந்தெடுப்பிற்கு நடத்தப்படும் தகுதி தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

 

இந்நிலையில் மதுரை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “20000 ஒன்றிய அரசுத் துறை/ நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு. இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை. ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி. இந்திக்கான தனி உரிமையை மறுப்போம். இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம்” எனக் குறிப்பிட்டு கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

அதில், “இது, ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதம்.

 

ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20000 காலியிடங்களுக்கு "ஸ்டாஃப் செலக்சன் கமிசன்" பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகப் பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

 

பணி நியமனத் தேர்வுக் கேள்வித் தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே - இந்தி, ஆங்கிலம் -இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடம் இல்லை.

 

இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தி இல்லாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப் போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்?

 

ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்சினைகள் பல துறைகளின்/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டாஃப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைப்பிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது.

 

எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாஃப் செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்