தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டது என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குறிப்பாக, இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பான ரகசிய விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாகவும் அவரின் ஆலோசனைப்படி சில முக்கிய முடிவுகளை அவர் எடுத்ததாகவும் தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், யார் அந்த இமயமலை சாமியார் என்றும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக இமயமலை சாமியார் என்பது வெறும் கட்டுக்கதை என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்த் சுப்ரமணியத்தின் ஆலோசனையின்படியே அவர் முக்கிய முடிவுகளை எடுத்ததும் தெரியவந்துள்ளது.
சிபிஐ அதிகாரிகளால் ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின்போது ஆனந்த் சுப்ரமணியத்திற்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர், இத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.