புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 26 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் விவசாயிகள் தொடர் சங்கிலித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சார்பில், கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பக்கம் தொடங்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள், சுமார் 75000 பேர் இந்த பக்கத்தினை பின்தொடர ஆரம்பித்தனர்.
இந்தநிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று திடீரென அந்த பக்கத்தை நீக்கியது. ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியதற்காக அந்த பக்கம் நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் பக்கம் நீக்கப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்தநிலையில் நீக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் மீண்டும் அந்த பக்கம் செயல்படத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், எங்கள் தானியங்கு அமைப்புகள் www.facebook.com/kisanektamorcha என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகரித்த செயல்பாட்டைக் கண்டறிந்து அதை ஸ்பேம் எனக் குறியிட்டது. இது எங்கள் விதிமுறைகளை மீறுவதாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்தவுடன் 3 மணி நேரத்திற்குள் பக்கத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தோம் எனக் கூறியுள்ளார்.