![MAMATA BANERJEE](http://image.nakkheeran.in/cdn/farfuture/4QSjVL_CwqsYXWI7nAMVQVgMZKy8KE5Bt-REgFzYga8/1626260569/sites/default/files/inline-images/Untitled-1_236.jpg)
மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார். அதன்படியே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை முதலில் கௌஷிக் சந்தா என்ற நீதிபதி விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கௌஷிக் சந்தாவிற்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதால், அவர் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கௌஷிக் சந்தா இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.
இதனையடுத்து ஷாம்பா சர்க்கார் என்ற நீதிபதிக்கு, இந்த தேர்தல் முடிவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷாம்பா சர்க்கார், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நந்திகிராம் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், தேர்தல் பேப்பர்கள், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி ஷாம்பா சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.