ஊழியர்கள் தினமும் 30 நிமிடங்கள் தூங்குவதற்கு அனுமதி அளித்திருக்கிறது பிரபல நிறுவனம்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனமான 'Wakefit' நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, 'Wakefit' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சைதன்யா இராமலிங்க கவுடாவின் அறிவிப்பில், 'Wakefit' நிறுவனத்தின் ஊழியர்கள் மதியம் 02.00 மணி முதல் 02.30 மணியளவில் அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்ளலாம். இதற்கான வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது.
மதிய நேரத்தில் தூங்குவது நினைவு திறன், படைப்பாற்றல் மற்றும் கவனக்கூர்மையை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றிலும் 26 நிமிட பகல் நேரத் தூக்கம் உழைப்பாற்றலை 33% அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
'Wakefit' நிறுவனத்தின் அறிவிப்பால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.