மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மம்தா பானர்ஜி அந்த கடிதத்தில், "பாஜக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தில் மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு, ஆளுநர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கி வருகிறது. பாஜக அரசு, தங்கள் அரசியல் லாபத்திற்காக, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை, பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துகிறது. மோடி அரசு, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது. எதிர்பார்த்தபடியே இந்த அமைப்புகள், பாஜகவை சாராத தலைவர்களையே குறிவைக்கும். பாஜக தலைவர்களைக் குறிவைக்காது.
மோடி அரசு, மாநிலங்களுக்கு குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய நிதியை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கிறது. இதனால் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சவால்களை சந்திக்கிறோம். பாஜக சந்தேகத்துக்குரிய முறையில், ஏராளமான வளங்களைப் பெறுகிறது. இதனை பாஜக அல்லாத அரசுகளை கவிழ்க்கவும், பாஜக அல்லாத கட்சிகளில் பிரிவினையை ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறது. சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவும், மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிக்குமான உறவும் இப்போது இருப்பதுபோல் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. இதற்கு பிரதமரின் சர்வாதிகாரப் போக்கே காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கடிதத்தில் முன்வைத்துள்ள மம்தா, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்ட மற்றும் திறன்மிக்க போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளதோடு, "தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பிறகு, இந்தப் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து செயல்திட்டத்தை வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என பாஜகவை சாராத கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.