உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளைக் களங்கப்படுத்தும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனுத் தாக்கல் செய்திருப்பதால் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூதாட்டம் குறித்து பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளில் தனது பெயரும் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்காக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம் தோனியை சூதாட்டத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்து இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் களங்கப்படுத்தும் வகையில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக, தோனி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.