நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி நடந்த சிறப்புக் கூட்டத் தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் சந்திரயான் 3 வெற்றி குறித்துப் பேசினர். இதில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி பேசினார். அப்போது பாஜக எம்.பி.யான ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியைப் பார்த்து இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் அவதூறாகப் பேசினார். இதற்கு நாடாளுமன்றத்தின் உள்ளே கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரமேஷ் பிதுரிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு நேற்று முன் தினம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பா.ஜ.க எம்.பி. ரமேஷ் பிதுரி பேசியது எந்த நாகரீக சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், அதே சமயத்தில் பிரதமர் மோடி குறித்து சாதி ரீதியாக டேனிஷ் அலி அவதூறாகப் பேசியுள்ளார். மேலும், எம்.பி. ரமேஷ் பிதுரி பேசிக் கொண்டிருந்தபோது அவரைத் தூண்டிவிடும் வகையில் டேனிஷ் அலி விமர்சித்தார். பிதுரியின் அமைதியைச் சோதிக்கும் வகையில் விரும்பத்தகாத கருத்துகளை அவர் தெரிவித்தார். அவரது மோசமான பேச்சால் தான் ரமேஷ் பிதுரி அமைதியை இழந்துள்ளார். எனவே, டேனிஷ் அலியின் அநாகரீக பேச்சு மற்றும் நடத்தை குறித்தும் அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டேனிஷ் அலி, “நாடாளுமன்ற அவையில் வைத்து என் மீது வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது, அவைக்கு வெளியே என்னைத் தாக்கும் விதமாக இதுபோன்ற பல கட்டுக்கதைகள் உருவாக்குகிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என மக்களவை தலைவருக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று கூறினார்.