காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து கடிதம் எழுதிய தலைவர்களில் நான்கு பேருக்கு காங்கிரஸ் அமைத்துள்ள மூன்று குழுக்களில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் 24/08/2020 காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் காரிய குழுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்த நிலையில், தலைமை விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் எனவும், கட்சியில் மாற்றம் தேவை எனவும் கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு, பொருளாதார விவகாரம், வெளிநாட்டு விவகாரம் ஆகிய மூன்று ஆலோசனைக் குழுக்களில், இந்த அதிருப்தி குழுவிலிருந்த ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் மற்றும் சசிதரூர் உள்ளிட்ட நான்கு தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசியப் பாதுகாப்புக் குழு, பொருளாதார விவகாரம், வெளிநாட்டு விவகாரம் ஆகிய 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார விவகாரக் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஒருங்கிணைப்பாளராக மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செயல்படுவார். வெளிநாட்டு விவகாரக் குழுவில் உறுப்பினர்களாக மன்மோகன் சிங், மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா, சசி தரூர், சல்மான் குர்ஷித், சப்தகிரி உல்கா ஆகியோரும், இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக சல்மான் குர்ஷித் செயல்படுவார். தேசியப் பாதுகாப்புக்கான குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், வீரப்பமொய்லி, வின்சென்ட் ஹெச் பாலா, வி. வைத்திலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக வின்சென்ட் ஹெச் பாலா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.