Skip to main content

“கல்வி முறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது” - எம்.பி. கிரிராஜனின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
central govt said Fund allocation has been increased improve education system

கல்வி முறையை வலுப்படுத்துவதையும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, திமுக எம்.பி. ஆர்.கிரிராஜனின் கேள்விகளுக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்துள்ளார்.

உயர் கல்விக்கான அரசின் செலவுகள், மொத்த பதிவு விகிதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கிரிராஜன் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய இணை அமைச்சர் அளித்துள்ள பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் உயர் கல்விக்கான முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், 2016- 2017ஆம் நிதியாண்டில் 2.21 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2020-21ல் 3.11 லட்சம் கோடி ரூபாயாக செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும், இது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செலவினம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கல்விக்கான மத்திய செலவினத்தின் சதவீதம் 1.13% என்ற அளவிலேயே இருப்பதையும் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் பதிவு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த கேள்விக்கு அளித்துள்ள பதிலில், உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை 2014-15ல் 760 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2022-23ல் 1,213 ஆக உயர்ந்ததுள்ளதாகவும், கல்லூரிகளின் எண்ணிக்கை 38,498லிருந்து 46,624 ஆக உயர்ந்துள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி, சிறுபான்மையினர் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இயல்பான கற்றல் விருப்பத்தைக் கருத்தில்கொண்டு ஸ்வயம் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

பல்வேறு துறைகளிலும் கல்வியின் கட்டமைப்பை கருத்தில் கொண்டும், கிராமப்புற மாணவர்களை கருத்தில்கொண்டும் 13 மொழிகளில் JEE, NEET, CUET ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக மொத்த பதிவு விகிதமான GER என்பது 2014-15ல் 23.7%-லிருந்து 2022-23-ல் 29.5%ஆக உயர்ந்துள்ளது என்றும், பி.எச்.டி. படிப்பில் 2014-15ல் 1.17 லட்சமாக இருந்த பதிவுகள் 2022-23ல் 2.33 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், யுஜிசி(UGC) பெரிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு 675.69 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும், சிறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு 273.25 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார், ராஷ்ட்ரிய உச்சதர் ஷிக்ஷா அபியான் (RUSA), சமூக அறிவியலில் தாக்கக் கொள்கை ஆராய்ச்சி (IMPRESS), தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் (IMPRINT) போன்ற திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2021-2022ல் 93,000 கோடியிலிருந்து 2024-2025ல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியாக உயர்த்தியதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதையும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்