தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகக் கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவிக்கும் பட்சத்தில் அதுகுறித்த முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட முன்மொழிவுகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்பதை மத்திய அரசின் பதில் மூலம் தெரியவந்திருக்கிறது.
வேளாண் மண்டலம் குறித்து மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. வழக்கறிஞர் சுதா, நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்கத் தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ள. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும். எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கத் தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு இது தொடர்பான எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.