மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதே நாள் கடந்த வருடம் சில்க் ஸ்மிதா வாழ்க்கை திரைப்படமாக உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. இதில் ‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பு மாற்றப்பட்டு ‘சில்க் ஸ்மிதா - குயின் ஆஃப் சௌத்’ என இடம்பெற்றுள்ளது. கிளிம்ஸில் சில்க் ஸ்மிதா ஒரு தெருவில் காரில் இருந்து வந்து இறங்கி, அங்கிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அப்போது அவரை அங்கிருக்கும் ஆண்கள் ஏக்கத்தோடு பார்க்க, சில்க் ஸ்மிதா மீண்டும் காரில் வந்து உட்காருகிறார். அப்போது அவரை சுற்றி எழுந்த விமர்சனங்கள் பின்னணியில் ஒளிக்க அதோடு கிளிம்ஸ் முடிகிறது. மேலும் கிளிம்ஸ் முழுக்க இளையராஜா இசையில் சில்க் ஸ்மிதா நடனமாடிய ‘மெல்ல மெல்ல என்னை தொட்டு’ பாடலின் பிண்ணனி இசை இடம்பெறுகிறது. ஏற்கனவே இந்தாண்டு இப்படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்பும் இந்த கிளிம்ஸில் இடம் பெறவில்லை.