கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.
தென்னிந்தியாவில் பாஜக கைவசம் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகாதான். தற்போது அங்கு பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது இந்திய அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் கர்நாடக காங்கிரஸை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநில கட்சிகள் எங்கு வழுவாக இருக்கிறதோ, அங்கு பாஜகவால் போராட முடியாது. குறிப்பிட்ட தொகுதிகளில் உள்ள பலம் வாய்ந்த கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ள மம்தா, அதே வேளையில் மேற்கு வங்கத்தில் தனது கட்சிக்கு எதிராக காங்கிரஸ் போராடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியில் திரள வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ள நிலையில் தற்போது மம்தாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.