சமீபத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த சில தினங்களிலே, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவை இந்து கோயிலை இடித்து கட்டுப்பட்டுள்ளதாக இந்து அமைப்பான இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா சார்பில் அஜ்மீரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதி (20-12-24) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லியில் அரசியலமைப்பை காப்போம் என்று காங்கிரஸ் சார்பில் நேற்று (01-12-24) பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டிலுள்ள ஒவ்வொரு மசூதியிலும் கணக்கெடுப்பு நடத்தி சமூகத்தை பிளவுபடுத்த பா.ஜ.க தலைமை முயற்சிக்கிறது. இதுபோன்ற கணக்கெடுப்புகளை அனுமதிப்பதன் மூலம் மக்களின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார்.
இஸ்லாமியர்கள் கட்டியதால் செங்கோட்டை, தாஜ்மஹால், சார்மினார் போன்ற அடையாளங்களை பா.ஜ.க தலைவர்கள் இடிப்பார்களா?. பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்களின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க மோடி எல்லாவற்றையும் செய்கிறார், சமூகத்தையும் சாதிகளையும் கூட பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நமது போராட்டம் அந்த வெறுப்புக்கு எதிரானது, அதனால்தான் அரசியல் அதிகாரம் முக்கியமானது” என்று கூறினார்.