Skip to main content

மீட்டிங்கை கேன்சல் செய்த ஏக்நாத் ஷிண்டே; மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்!

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
Confusion continues in Maharashtra for Eknath Shinde cancelled the meeting

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனாலும், புதிய ஆட்சி அமைப்பில் இன்னும் குழப்பம் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க வென்றதால், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது. 

இதற்கிடையே, மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, அதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணியில் உள்ள மூன்று தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுவதால் அம்மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தாமதமாகி வருகின்றது.  புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்தது. 

மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மற்றொரு தலைவரை துணை முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும் என்று தெரிவித்தது. ஒரு பக்கம், ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும், மறுபக்கம், சிவசேனாவுக்கு உள்துறை அமைச்சக இலாகாவை கேட்டு பா.ஜ.கவுக்கு சிவசேனா நிபந்தனை விதிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஏக்நாத் ஷிண்டே, தனது சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் இலாகா ஒதுக்கீடு குறித்தும் பா.ஜ.க தலைவர்களுடன் இன்று (02-12-24) டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்கவில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து  சிவசேனா தெரிவிக்கையில், ஏக்நாத் ஷிண்டே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பு நாளை (03-12-24) நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், டெல்லியில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளார். 

சார்ந்த செய்திகள்