சமீபத்தில் திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் விவாகரத்து சமூகவலைத்தளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதாவை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் விவாகரத்து பற்றிய விளக்கத்தை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
கிரே விவாகரத்து (Grey Divorce) என்பது 50வயதுக்கு மேற்பட்டவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகுவதுதான். குறிப்பாக சினிமா துறையில் இந்த விவாகரத்து முறையைப் பற்றி கேள்விப்படும் போது அது பரவலாக ஊடகங்களில் பேசப்படுகிறது. தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று அதைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அடிப்படையில் விவாகரத்து என்பதை ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற விஷயத்தைப் பற்றியும், கிரே விவாகரத்து பற்றியும் பார்க்கலாம்.
இந்துக்களிடையே நடக்கும் திருமணங்களில் பத்து விதமான நடைமுறைகள் முன்பு இருந்தது. இஸ்லாமியர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. கிறிஸ்தவர்களுக்கான திருமணச் சட்டம் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் அது பிரிட்டிஷ்காரர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. 1860ல் விவாகரத்து சட்டம் வந்தது. அது கிறிஸ்துவர்களுக்கானதாக மட்டும் இருந்தது. அதுபோல இந்துகளுக்காக சட்டம் இயற்ற வேண்டிய பணியை டாக்டர் அம்பேத்கர் செய்யத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது அதில் திருமணச் சட்டம், குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்சம் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து தத்தெடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் வந்தது. இந்த சட்டங்கள் வருவதற்கு முன்பு விவாகரத்து என்பது இந்துக்களிடையே சாத்தியமில்லாததாக இருந்தது. ஆண் நினைத்தால் தன் மனைவியை வைத்துக்கொண்டு இன்னும் 4 பெண்களை சேர்த்து வைத்துக்கொள்வார். ஆனால் பெண்கள் மட்டும் முதல் தாரம், இரண்டாம் தாரம் என்று கணவனுடன் வாழும் பழக்க வழக்கம் இருந்தது. சாகும்வரை பெண்களுக்கு இந்த நிலைதான் இருந்தது.
விவாகரத்து சட்டம் வந்த பிறகு என்பது பெண்களுக்கான உரிமையையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த சட்டம் பொதுவாக இருந்தது. உதாரணத்திற்குக் கொடுமையாக நடத்தினால், வன்முறை ஏற்பட்டால், துறவு வாழ்க்கைக்குச் சென்றால், சிறை சென்றால், தீர்க்க முடியாத நோய் வருவது உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் விவாகரத்து கோரி ஆண், பெண் இருவரும் நீதிமன்றத்தை அணுக இச்சட்டம் உதவியாக இருந்தது. இதன் மூலம் பரஸ்பர விவாகரத்து கோரி விவாகரத்தும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இது அனைத்து மதத்தினருக்கும் இருக்கிறது. விவாகரத்து என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான அடிப்படை உரிமை. திருமணம் முடிந்தால் கட்டாயம் வாழ்ந்து ஆகவேண்டும் என்பது அந்த அடிப்படை உரிமை பறிக்கும் வகையில் இருக்கும். முன்பு சொன்ன பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும்.
மதங்களில் திருமணத்தை கடவுளால் ஏற்படும் இணைப்பு என்று கூறி மனிதர்கள் அதை பிரிக்க கூடாது என்று சொல்வார்கள். இதெல்லாம் ஆண் மற்றும் பெண்ணின் தனிப்பட்ட உரிமையை பறிப்பதுதான். ஒரு பெண் திருமணம் செய்துவிட்டு கணவர் என்ன தவறு செய்தாலும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. பெண்களுக்கு விவாகரத்து உரிமை மிகவும் அவசியமானது. அதனால் விவாகரத்து என்பதை கெட்டவார்த்தையாகவோ தவறானதாகவோ நினைக்க வேண்டாம். விவாகரத்து பெற்ற பெண்கள் தவறானவர்கள் என்ற பார்வையை நீக்க வேண்டும். அதேபோல் கிரே விவாகரத்தும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். 30 வருடங்களுக்கு மேல் ஒன்றாக கணவருடன் இருந்த பெண்களிடம் எப்படி இருக்கீங்க என்று கேட்டால், ஏதோ இருக்கிறேன் என்று சொல்வார்கள். அவர்களின் வாழ்க்கை இப்படிதான் விதிக்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்க முடியாத அளவுக்கு தள்ளப்படுவார்கள்.
அதே போல் ஆண்களிடம் கேட்டால், குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதற்காக சகித்துக் கொண்டு மனைவியிடம் சண்டை போட்டு வாழ்ந்து வருவதாகச் சொல்வார்கள். குழந்தைகளை வளர்ப்பதற்காக வாழ்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் முன்பு சண்டையிட்டுக் கொண்டால் அந்த குழந்தைகளும் பாதிப்படைவார்கள். அதனால் எதிர்காலத்தில் அந்த குழந்தைகள் வளர்ந்து தங்களின் இணையரிடமும் அதே தவறை செய்து வாழ முடியாமல் தவிப்பார்கள். வாழ்வதற்கு வன்முறையற்ற சூழல் வேண்டும் அது கிடைக்காத பட்சத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்வதுதான் சரியானது. இப்போது விவாகரத்துகள் அதிகம் ஏற்படக் காரணம் பெண்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்திக்கொண்டு தங்களின் வாழ்க்கையை அவர்களே நிர்ணயிக்க முடிகிறது. வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை தங்களுக்குப் பிடித்த முறையில் சுதந்திரமாக வாழ முடியும் என்ற கருத்து மாற்றம் அவர்களிடையே உருவாகியுள்ளது. முன்பு திருமணமானால் பெண்களைப் பேசவே கூடாது என்று ஒடுக்கிவைப்பார்கள். அதற்கு மாறாகக் கருத்துகள் எழும்போது பல விவாகரத்துகள் பெண்கள் மத்தியில் நடக்கிறது. விவாகரத்தைப் பற்றிக் கேட்பவர்கள் பார்ப்பவர்கள் அது தனிப்பட்ட இன்னலுக்கு கிடைத்த தீர்வாக நினைக்க வேண்டும். அதை மதிக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதைப் பற்றி கருத்து தெரிவித்து ஆராய அவசியம் இல்லை. பக்கத்து வீட்டு ஜன்னல எட்டிப் பார்க்காமல் இருப்பதுதான் சரி என்றார்.