திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு வீட்டில் இருந்த ஏழு பேரின் நிலை என்னவானது என்று தெரியாத அளவிற்கு தற்பொழுது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வஉசி நகர் மட்டுமல்லாது டிசம்பர் இரண்டாம் தேதியான இன்று காலையும் திருவண்ணாமலை தெற்கு பகுதியில் மலைப்பகுதியின் உச்சியில் இருந்து மண்சரிந்தது. மாவட்ட நிர்வாகமும் பேரிடர் மீட்புக் குழுவும் அந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை அந்த பகுதியில் விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக ராஜ்குமார் என்பவர் வீட்டின் மீது விழுந்த பாறை மற்றும் மண் சரிவில் பெரியவர்கள்,சிறியவர்கள் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கடந்த 20 மணிநேரமாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சீதோஷ்ண நிலை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஓன்று சிக்கியுள்ளது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறுவன், பெரியவரின் உடல் என இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 2 உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உடல்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது திருவண்ணாமலை.