Skip to main content

தந்தை, தாய், மகன் கொலை; விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
information released in the investigation of father, mother, son incident

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அமலாத்தாள் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (29.11.2024) காலை அவர் வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி ஒருவர், வீட்டில் இருந்த 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தெய்வசிகாமணியின் தோட்டத்திற்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர். இதனையறிந்து தோட்டத்தில் இருந்த நாய் குரைத்துள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த தெய்வசிகாமணியை மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அமலாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரையும் மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட செந்தில் குமார் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

தனது உறவினர் ஒருவருக்காக பெண் பார்ப்பதற்காக அவர் வந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாகன தனிக்கையைத் தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த பீரோ அலங்கோலமாக உள்ளது. அதோடு 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்