நக்கீரன் நடத்தும் ‘முதலீடு’ என்ற நிகழ்ச்சி வாயிலாக இளைஞர்கள் கடனில் சிக்கி பாதிப்புகுள்ளாவைதைப் பற்றி நிதி நிபுணர் செழியன் நம்மிடையே விவரிக்கிறார்.
கல்லூரி முடித்துவிட்டு நேரடியாக பெருநகரங்களுக்கு வேலைக்கு வரும் இளைஞர்கள், முதல் மூன்று மாதங்களில் தங்களுடைய சம்பாத்தியத்தில் செலவு செய்கின்றனர். அதன் பிறகு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளும் பங்கு போட்டுவிடும். முதலில் சின்ன தேவைக்கு கடன் பெற வைத்து அதன் பிறகு அவர்களைத் தொடர்ந்து கடன் பெற பழக்கப்படுத்திவிடுவார்கள். முன்பு கடன் வாங்குவதற்கு பலமுறை அலைய வேண்டி இருக்கும். ஆனால், இப்போது பல ஐடி நிறுவனங்களின் வாசல்களில் கடன் கொடுக்க தயாராக வங்கிகள் இருக்கிறது. ஒரே ஒரு கையெழுத்து பெற்றுக்கொண்டு உடனே கடன் தந்துவிடுவார்கள். அந்தளவிற்கு இந்த கடன் கொடுக்கும் நடைமுறை எளிதாகிவிட்டது. இளைஞர்கள் கையெழுத்திட்ட பிறகு நான்கு நாட்களிலேயே கிரிடிட் கார்டு மற்றும் தனி நபர் கடன் கிடைத்துவிடுகிறது. எப்படியும் வேலை செய்யும் இளைஞர்கள் பத்து பேர் இருந்தால் அதில் 7 நபராவது கடன் பெற்றுவிடுவார்கள். மற்ற மூன்று பேரும் அடுத்தடுத்த மாதங்களில் வாங்க தொடங்குவார்கள். இதுபோல வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடியால் இன்று கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
மொபைல் ஆஃப்ஸ் மூலம் நேரடியாக அல்லது காணொளி வாயிலாக தங்களுடைய ஆவணங்களை கொடுத்து இளைஞர்கள் கடன் பெற்றுக்கொள்கின்றனர். எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் மொபைல் ஆஃப் மூலம் கடன் பெற்றுள்ளார். அதன் பிறகு அந்த நிதி நிறுவனத்திலிருந்து அவரை தொடர்புகொண்டு ரூ.12 லட்சம் தருகிறோம் என்று சொல்லியுள்ளனர். அந்த நபருக்கு அவ்வளவு பணம் தேவையில்லாத போதும் ஏதோ ஒரு வகையில் சரி கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அவருக்கு மூன்றே நாளில் அந்த தொகையை அந்நிறுவனம் கொடுத்துவிடுகிறது. அதோடு ஆறு மாதங்களுக்கு பிறகுதான் மொத்த தொகையையும் திருப்பி கட்ட முடியும் என்று சொல்லியிருக்கின்றனர். அவர் அதிலிருந்து சின்ன தொகையைப் பயன்படுத்திவிட்டு முழுவதுமாக அவர் திருப்பி கொடுக்க போகும் போது, ரூ.50,000 அபராதம் கொடுக்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றனர். அவர் என்னை அழைத்து நடந்ததைச் சொன்னார்.
அவரும் நானும் அங்கு சென்று, 6 மாதங்களுக்கு பிறகு மொத்த தொகையை கட்டினால் அபராதம் செலுத்த தேவையில்லையென்று சொன்னீர்கள் இப்போது ஏன் அபராதம் கேட்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், அதெல்லாம் எழுத்துப்பூர்வமாக அப்படி ஏதும் சொல்லவில்லை. அதனால் அபராதம் செலுத்துங்கள் என்று சொல்லி, இரண்டு வருடத்திற்குள் தொகையைக் கட்டினால் அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்ற விபரத்தைச் சொன்னார். அதன் பிறகு அவர் தேவையில்லாமல் வாங்கிய கடனுக்கு அபராதத்துடன் திருப்பி கொடுத்தார். வங்கிகள் இன்று இளைஞர்களுக்கு, நெருக்கடி தந்து கடன் பெற்றுக்கொள்ள வைக்கின்றனர். அரசு வங்கிகளில் கடன் கொடுக்க தாமதமாகும் என்று தெரிந்துகொண்ட வங்கிகள் இன்று போட்டிப்போட்டு இளைஞர்களுக்கு கடன் கொடுக்க முன் வர ஆரம்பித்துவிட்டனர். இன்று இருக்கும் பல வங்கிகள் கடன் கொடுப்பதை மிகவும் எளிய முறையில் நடைமுறைப்படுத்துவதால் நிறைய இளைஞர்கள் அந்த வங்கிகள் விரித்த வலையில் விழுகின்றனர். மொபைல் செயலிகள் மூலம் கடன் வாங்குவது மோசமான கலாச்சாரமாக இன்று மாறிவிட்டது. இது கையெழுத்துப் போட்டு வாங்கும் கடனைவிட மிகவும் மோசமானது. எனக்குத் தெரிந்த மற்றொரு நபர் ஒருவர், மொபைல் செயலி ஒன்றில் கடன் பெற்றதாகவும் கடன் செலுத்தும் நாளில் கடன் செலுத்தாததாலும் தன்னுடைய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி விட்டனர் என்று புலம்பினார்.
அதன் பின்பு அவரிடம் பொறுமையாக நடந்ததை சொல்லுங்கள் என்றேன். அவர் என்னிடம், முதலில் தன்னுடைய ஆதார், வங்கி எண், பான் எண் என அனைத்தையும் கொடுத்துவிட்டு அவர்கள் தருவதாக சொன்ன ரூ.50,000 பணத்திற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் தன்னுடைய வங்கி கணக்கில் வெறும் ரூ.3500 மட்டும்தான் வந்திருந்தது. என்னவென்று கேட்டதற்கு முதலில் ரூ.3500 கொடுத்து பணத்தை ஏழு நாட்களுக்குள் திருப்பி கட்டினால் மேற்கொண்டு பணத்தை கொடுப்போம் என்று கூறினார்கள். தான் அந்த தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததால் அதற்கு வட்டி போட்டனர். அதன் பிறகு அந்த தொகையை திருப்பி செலுத்தினால் ரூ.10,000 தருகிறோம் என்று அடிக்கடி கால் செய்தனர். மொபைல் சுவிட் ஆஃப் செய்ததால் புகைப்படத்தை தவறுதலாக பயன்படுத்தி மிரட்டுகின்றனர் என்று சொன்னார். பின்பு அவரின் உறவினர்கள் அவருக்கு போன் செய்து அந்த நபரின் புகைப்படங்கள் நிர்வாணமாக வருவதை சொல்லியிருக்கின்றனர். அவரின் வாட்ஸ் அப்-ஐ ஓபன் செய்து பார்த்தால் அந்த நிறுவனத்திடமிருந்து மிரட்டல் மெசேஜ்கள் வந்துள்ளது. அந்த மெசேஜ்களில் அவர் ஆதார் எண்ணை ட்ரக் மாஃபியாக்களிடம் விற்றுவிடுவதாகவும் பல மிரட்டல்கள் விடுத்துள்ளனர். பதற்றத்தில் அவர் முதலில் வட்டியுடன் பணத்தைக் கொடுத்துள்ளார். அதன் பின்பு அவரிடம் சைபர் கிரைம் போலீசாரிடம் மிரட்டல் வந்தாக புகார் தெரிவித்துவிடுங்கள் என்றேன். அதைத் தொடர்ந்து அவருக்கு வந்த மிரட்டல்கள் வராமல் இருந்தது. மூன்று நாள் கழித்து அந்த நபர் ப்ளே ஸ்டோரில் எந்த செயலியைத் தேடிப் பார்த்திருக்கிறார் அது இல்லாமல் இருந்திருக்கிறது. இப்படி குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து ஒரே நாளில் கடன் கொடுத்து மிரட்டி பணம் பறிக்கும் செயலை போலியான நிறைய செயலிகள் செய்து வருகிறது.
ஆன்லைனில் கடன் கொடுக்கும் செயலிகள் 99% போலியானதுதான். ஆன்ராய்டு மொபைல்களில் தேவையற்ற செயலிகள் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் ஐ.ஓ.எஸ். மொபைல்கள் தேவையில்லாமல் இருக்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பணம் அதிகமாக கொடுத்து அதுபோன்ற மொபைகளை இன்று அனைவரும் வாங்கி வருகின்றனர். நான் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் வருவது ஆன்ராய்டு மொபைகளில்தான். மத்திய அரசு இப்போது இதுபோல செயல்படும் பல செயலிகளை முடக்கியுள்ளனர். முடிந்தளவிற்கு கண்ணுக்குத் தெரிந்த நபர்கள் அல்லது வங்கிகளிடம் கடன் வாங்குங்கள். அப்படி வாங்கினால் நேரடியாக அவர்களிடம் பேச முடியும். கடன் செலுத்த தாமதமானால் கூட நாட்களைத் தள்ளி வைக்கக் கோரி அணுக முடியும் என்றார்.