போடா போடி மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சில படங்களில் இருந்துள்ளார். அதோடு சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றியுள்ளார். இப்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே முன்னணி நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது திருமண வாழ்க்கை ஆவணப்படமாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இது கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் பட ட்ரைலர் வெளியான போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முதல் முறையாக இணைந்து பணியாற்றிய நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் இருவரும் பேசும் வீடியோ மூன்று வினாடி இடம்பெற்றிருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தடையில்லா சான்றிதழ் பெறாமல் பட வீடியோவை பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். பிறகு நயன்தாரா தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவனும் தனுஷ் பேசிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அவர் கொடுத்து பேட்டி விமர்சிக்கப்பட்டது. அதாவது அஜித், நானும் ரெளடி தான் படத்தை பல முறை பார்த்தாக தன்னிடம் கூறியதாகவும் என்னை அறிந்தால் படத்திற்கு பாடல் எழுதிய சமயத்தில் இது நடந்ததாகவும் விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் என்னை அறிந்தால் படம் நானும் ரௌடி தான் படத்திற்கு முன்னதாகவே வெளியானதால் விக்னேஷ் சிவன் பேச்சு சர்ச்சை ஆனது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் எக்ஸ் தள கணக்கு டீ ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. தொடர் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளதால் விக்னேஷ் சிவன் இந்த முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.