அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கேட்டால் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தயாராக இருப்பதாக ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சமகுரி தொகுதி 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. சமகுரி போன்ற ஒரு தொகுதியை காங்கிரஸ் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது. அதன் வரலாற்றில் மிகப்பெரிய அவமானம். இது பாஜகவின் வெற்றி என்பதை விட காங்கிரஸின் தோல்வி என்றே தான் கூற வேண்டும்.இந்த சோகத்தின் மத்தியில், ரகிபுல் ஹுசைன் ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னார். மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு, இல்லையா? வாக்காளர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கி காங்கிரஸ்-பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது தவறானது என்றார். வாக்காளர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கி காங்கிரஸ் சமகுரியை வென்றதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். அவருக்கு சமகுரியை நன்றாகத் தெரியும். மாட்டிறைச்சியைக் கொடுத்து சமகுரியை வெல்ல முடியுமா?.
மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று அவரே கூறியது தவறு என்று ரகிபுல் ஹுசைனிடம் சொல்ல விரும்புகிறேன். மாட்டிறைச்சி பற்றி பாஜகவோ, காங்கிரஸோ பேசக் கூடாது, அசாமில் தடை செய்யப்பட வேண்டும் என்பதை மட்டும் அவர் எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். ஹுசைனின் அறிக்கையின் பின்னணியில் மாட்டிறைச்சி மீதான எனது நிலைப்பாடு குறித்து மாநில காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதுவேன்.
எனவே, நான் பூபென் போராவுக்கு கடிதம் எழுதி, ரகிபுல் ஹுசைனுக்கு ஏற்ப அவரும் மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று வாதிடுகிறாரா என்று கேட்டு தெரிந்துகொள்வேன். அடுத்த சட்டசபையில் மாட்டிறைச்சியை முழுமையாக தடை செய்வேன். அதன் பிறகு, பா.ஜ.க, ஏ.ஜி.பி., சி.பி.எம்., யாருமே கொடுக்க முடியாது,. ஹிந்து, முஸ்லிம், கிறித்தவ எல்லாரும் மாட்டிறைச்சி சாப்பிடறதை நிறுத்துங்க, எல்லாப் பிரச்சனையும் தீரும். ரகிபுல் ஹுசைன் இந்த அறிக்கையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் குறைந்தபட்சம் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.