‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு ஊடகங்களில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்ற மாயையான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் தங்களிடம் இருக்கும் பண பலம், அதிகார பலம் என எல்லாவற்றையும் பயன்படுத்தி வெற்றி பெற நினைப்பார்கள். சினசேனா, என்.சி.பி போன்ற கட்சிகள் இரண்டாக உடைந்ததால் அக்கட்சியினர் தங்களுக்குள் யார் பெரிய ஆள் என்று போட்டிப் போட்டுத் தேர்தலில் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் அவர்கள் தேர்தல் களத்தில் வேலை செய்தனர்.
ஏக்நாத் ஷிண்டே தமிழ்நாட்டைப் பார்த்து மகளிர்களுக்கு ரூ.2100 தரப் போவதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. இது அவரின் வெற்றிக்குப் பெரிய அளவில் முக்கியமானதாக இருந்தது. அதே போல் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையாக உழைத்தது. ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாட இருப்பதால், தோல்வியை அவர்கள் ஏற்க இயலாமல் தேர்தலில் இறங்கி வேலை செய்தனர். இது பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அவர்கள் தங்களை சமூக சேவையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு பா.ஜ.க.-வுக்காக முழுமையாக தங்களை தேர்தலில் ஈடுபடுத்திக்கொண்டனர். இது அங்குள்ள அனைத்து பத்திரிக்கைகளிலில் செய்தியாகவும் வெளிவந்திருக்கிறது.
பிரதமர் மோடி எட்டுமுறை தேர்தல் பணியில் செயல்பட்டார். ஆனால் ராகுல் காந்தி மூன்று முறை மட்டும் சென்றிருக்கிறார். வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் அவர் கொடுத்த முக்கியத்துவத்தை மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் இருக்கிறது. இதை ஒரு குறையாக அங்குள்ள காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பேசி வருவது உண்மைதான். மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பு அதானியின் லஞ்சப் புகார் விஷயம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாகத் தேர்தலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தேர்தலில் அதானியின் பங்கு குறைவாக இருந்திருக்கும். பா.ஜ.க.வுக்காக அரசியலில் அதானி மிகப்பெரிய பங்காற்றிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வும் அதானியும் தங்களுக்குள் பரஸ்பர மனநிலையுடன் ஒன்றாக இருக்கின்றனர். அத்தானிக்காக மோடி. மோடிக்காக அதானி என்ற நிலையில்தான் தற்போது இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா அதானி மீதுள்ள புகாரைச் சொல்லியிருந்தால், தேர்தலில் அதானி கவனம் செலுத்தியிருக்க மாட்டார். அதானி பா.ஜ.க.வுக்கு வேலை செய்து தற்போது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கேற்ப பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனித்துப் போட்டியிட்டு பட்டியலினத்தவர்கள் ஒட்டுகளைப் பிரித்து பா.ஜ.க.-வுக்காக வேலை செய்து விட்டார். ஒவைசி சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்துவிட்டார். இதெல்லாம் பா.ஜ.க. வெற்றி பெற ஏதுவாக இருந்தது.
தேர்தலில் எலக்ஷன் கமிஷனுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தது. பல இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ஜ.க. செயல்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எலக்ஷன் கமிஷன் எடுக்கவில்லை. முதலில் தேர்தலுக்கு ஒரு தேதியைக் குறித்துவிட்டு அதன்பிறகு தேதியை மாற்றினார்கள். பா.ஜ.க. எலக்ஷனுக்கு செய்ய வேண்டிய வேலைகளில் எலக்ஷன் கமிஷனுக்கும் தொடர்பிருந்தது. அதோடு சேர்ந்து உச்சநீதிமன்ற தேர்தல் சரியாகத்தான் நடக்கிறது என்று க்ளீன் சீட்டை காண்பிக்கிறது. விதிமுறை மீறல்களைப் பற்றிக் கேட்பதற்கு கூட உச்சநீதிமன்றம் ரெடியாக இல்லை. சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் உடைந்த போது கட்சிகள் யாருக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டே இருந்தார்கள். தேர்தலில் எலக்ஷன் கமிஷன், நீதிமன்றம் ஆகியவை ஆளும் கட்சிக்கு சார்பாக இருப்பது, நேர்மையற்ற முறையில் தேர்தல் நடப்பது ஜனநாயக நாட்டில் மிகவும் ஆபத்தான ஒன்று என்றார்.